ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
சித்தர்களுக்கும் மஹன்யாய புருஷர்களுக்கும் உயர்ந்த ஆன்மாக்களுக்கும் ஜாதி,மத இன மற்றும் ஆண்,பெண் பேதமில்லை என்று உணர்த்தும் ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்னும் திருமூலரின் திருவாக்கிற்கிணங்க அனைத்து ஜாதியினராலும்,அனைத்து மதத்தவர்களாலும்,அனைத்து இனத்தவர்களாலும் பாகுபாடு இல்லாமல் வழிபாடு செய்யப்படும் ஸ்தலமாக சிதம்பரம் ஆறுபடை வீடு அமையப் பெற்ற நம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் மடாலயம் விளங்கி வருகிறது.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் ஞான
வாழ்க்கையில் சிதம்பரம்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் 17.03.1894ல் இராமநாதபுரம்
பிரப்பன்வலசை பூமியில் கடும் தவத்தைத் தொடங்கினார்.ஸ்ரீ
அகத்தியர்,ஸ்ரீஅருணகிரிநாதர் இவர்களுடன் அருள்மிகு முருகப்பெருமானையும் நேரில்
கண்டு ஞான உபதேசம் பெற்று தவத்திலிருந்து எழுந்தருளப் பெற்றார்கள்.
சைவத்தின் பெருமையை உணர்த்தல்
ஞான
உபதேசம் பெற்ற நமது சுவாமிகள்1903 முதல்1914 வரை சிதம்பரத்தைச் சார்ந்த
குயவன்பேட்டை,பின்னத்தூர் ஆகிய இடங்களிலும்,தற்போது சிதம்பரம் சபாநாயகர் தெருவில் ஸ்ரீமத்
பாம்பன் சுவாமிகள் மடாலயம் அமைந்துள்ள இடத்திலும் தங்கியிருந்து,
சைவசமயசரபம்,நாலாயிரப் பிரபந்த விசாரம்,சஷ்டி வகுப்பு முதலான நூல்களை இயற்றி
சைவசமயத்திற்காக வாதாடி சைவசமயத்தின் சிறப்பினை உலகிற்கு எடுத்தியம்பினார்கள்.
அருள்நிலை அடைதல்
நமது சுவாமிகள் சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான்
ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபத்தில் முதன்முதலாக அமர்ந்து,108 உபநிடதங்களை சமஸ்கிருதத்திலும்,தமிழிலும்
விளக்கம் செய்து சொற்பொழிவு செய்தார்கள்.பின்னர் நமது சுவாமிகள் சென்னை சென்று,பல
பாடல்களை செவ்வேள் பரமன் மீது பாடி 30.05.1929 ல் அருள்நிலை அடைந்தார்கள்.
நல்லதொரு சீடர் ஸ்ரீ நயினாசாமி
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின்
குருவருளையும்,திருவருளையும்,அருளாசியினையும் ஒருசேரப் பெற்றவர் சுவாமிகளின்
சீடர்களுள் ஒருவரான தெய்வத்திரு கவி.கு.நயினாசாமி ஆவார்கள். இச்சீடர் நமது
சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கியிருந்த புனித பூமியில், 1935 ல் ஒரு மடாலயத்தை
நிறுவியதோடு, ஒரு தெய்வ வழிபாட்டினை உறுதியாகக் கொண்டு அறநெறி பூஜைகளையும்
மேற்கொண்டார். 07.02.1982ல் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்காகவும்,பழநி
ஆண்டவருக்காகவும் அகத்தியர், அருணகிரிநாதரோடு ஆலயம் எழுப்பி குடமுழுக்கு
செய்தருளினார்கள்.20.08.1993ல் ஆறுபடை வீடு அமைத்து இரண்டாவது குடமுழுக்கு
நடைபெற்றது.
புதுவை இறையன்பர் தெய்வத்திரு
ஆர்.பி.பழநிப்பிள்ளை அவர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு திருக்கோயிலின்
கன்னிமூலையில் ஸ்ரீஜெயகணபதியும்,வாயுமூலையில் வாயுலிங்கமாக ளபசுபதீஸ்வரரும்
பிரதிஷ்டை செய்யப்பட்டு 07.07.2000ல் குடமுழுக்கும் சிறப்பாக செய்யப் பெற்றது.
நான்காவது குடமுழுக்கு 24.08.2004ல் நடைபெற்றது.
சித்தர்களுக்கும் மஹன்யாய புருஷர்களுக்கும் உயர்ந்த ஆன்மாக்களுக்கும் ஜாதி,மத இன மற்றும் ஆண்,பெண் பேதமில்லை என்று உணர்த்தும் ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்னும் திருமூலரின் திருவாக்கிற்கிணங்க அனைத்து ஜாதியினராலும்,அனைத்து மதத்தவர்களாலும்,அனைத்து இனத்தவர்களாலும் பாகுபாடு இல்லாமல் வழிபாடு செய்யப்படும் ஸ்தலமாக சிதம்பரம் ஆறுபடை வீடு அமையப் பெற்ற நம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் மடாலயம் விளங்கி வருகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணிக்கு மடாலயம்
திறக்கப்பெற்று கருவறையில், ஆதிகணபதி மற்றும் பாலதண்டாயுதபாணியுடன் வீற்றிருக்கும்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கும் அர்த்த மண்டபத்தில் அகத்தியர் மற்றும்
அருணகிரிநாதருடன் வீற்றிருக்கும் ராஜகணபதிக்கும்,கன்னி மூலையில் வீற்றிருக்கும்
ஜெய கணபதிக்கும், வாயு மூலையில் வீற்றிருக்கும் பசுபதீஸ்வரருக்கும்,குமரக மண்டபத்தில்
வீற்றிருக்கும் சுவாமிமலை,திருத்தணி,பழமுதிர்ச்சோலை,
திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் முருகப்பெருமான்
மூர்த்தங்களுக்கும், மயூரநாதருக்கும், ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் நவவீரர்
மற்றும் கடம்ப பெருமானுக்கும், அக்னி மூலையில் வீற்றிருக்கும் இடும்பப்
பெருமானுக்கும் நல்லெண்ணை,பால் இவைகளால் ஒவ்வொரு நாளும் கிரமமாக அபிஷேகம்
செய்யப்பெற்று வருகிறது.
அனைத்து மூர்த்தங்களுக்கும் விசேஷ உற்சவ
மூர்த்திகளுக்கும் கார்த்திகை,வளர்பிறை சஷ்டி,விசாகம் மற்றும் பௌர்ணமி ஆகிய
விரதாதி விசேஷ தினங்களில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் இயற்றப் பெற்ற பரிபூஜன
பஞ்சாமிர்த வண்ண பாராயணத்துடன் பால்,தயிர்,நெய், சர்க்கரை,தேன் எனும் ரசப்
பஞ்சாமிர்தம் மற்றும் பழப் பஞ்சாமிர்த அபிஷேகங்களும்,இளநீர்,பன்னீர்,மற்றும்
சந்தனாபிஷேகமும் சிறப்பான அலங்காரங்களுடன், தூப,தீப நைவேத்திய ஆராதனைகளும்
சிறப்பாக செய்யப்பெற்று வருகிறது.
மற்ற ஆலயங்களைப் போல் அல்லாது, தூய்மையாக நியம
அனுஷ்டான முறையுடன் வரும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிருக்கு அனைத்து நாட்களிலும்
வெளிப்புறத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அனைத்து மூர்த்தங்களுக்கும்
அபிஷேகம் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு
அன்பர்களின் உடல்,உளக்குறைபாடுகள் நீங்க கூட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
சங்கடங்கள் நீங்கும் வண்ணமாக சங்கடஹர
சதுர்த்தியில் மாலை 5.00 மணிக்கு ஜெயகணபதி மற்றும் நர்த்தன உற்சவ கணபதிக்கு
அபிஷேக,தூப, தீப, அலங்கார நைவேத்திய ஆராதனைகள் சிறப்பாக செய்யப் பெற்று வருகிறது.
மற்ற ஆலயங்களைப் போல் அல்லாது விசேஷ தினங்களில்
வெளி அன்பர்கள் எடுத்து வரும் நைவேத்தியப் பொருள்களை நைவேத்தியம் செய்து
அன்பர்களுக்கு வழங்கப்பெறுகிறது.
ஊழ்வினைகள் நீங்கும் வண்ணமாக பிரதோஷ காலங்களில்
மாலை 5.00 மணிக்கு நந்திகேஸ்வரர் மற்றும் பசுபதீஸ்வரருக்கு அபிஷேக தூப,தீப, அலங்கார,நைவேத்திய
ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வைகாசியில் நடைபெறும் சுவாமிகளின்
குருபூஜையிலும் ஐப்பசியில் நடைபெறும் மகா கந்த சஷ்டியிலும் மார்கழி மாதம் மயூர
வாகன சேவன விழா,பங்குனியில் நடைபெறும் உத்திரப் பெருவிழாவிலும் சிறப்பு
அபிஷேக,தூப,தீப,அலங்கார,நைவேத்திய ஆராதனைகளும் நடைபெறும்.
இவைகளுடன் சிவனடியார்களுக்கு செய்யும் தொண்டே
மகேஸ்வரனுக்கு செய்யும் தொண்டு என்பதனை உணர்த்தும் ‘மகேஸ்வரபூஜையும்’
சிவனடியார்களுக்கு ‘ ஆடை தானமும் ’ சிறப்பாக செய்யப்பெற்று வருகிறது. மேற்கண்ட
இந்த மூன்று விசேஷங்களில் மகாபிஷேகம் நடைபெறும் சமயத்தில் வெளி அன்பர்கள்
அனைவருக்கும் கருவறை வரை சென்று ஆதிகணபதி மற்றும் பாலதண்டாயுதபாணியுடன்
வீற்றிருக்கும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கு அனைத்து அபிஷேகங்களும் செய்ய
சிறப்பு அனுமதி அளிக்கப்பெற்று வருகிறது.
இந்த மூன்று விசேஷங்களிலும் மாலை நேரத்தில்
சிதம்பர நகரின் முக்கிய வீதிகளிகளுக்கும்,மற்ற இடங்களிலும் தேர் பவனியாக வீதியுலா
புறப்பாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மகா கந்த சஷ்டியின்
கடைசி திருநாளிலும்,பங்குனிஉத்திர பெருவிழாவிலும் வள்ளி தேவசேனா சமேத முருகப்
பெருமானுக்கு தமிழ் முறைப்படி “ திருக்கல்யாண வைபவம் ” சிறப்பாக நடத்தப்பெற்று
தொடர்ந்து வள்ளி,தேவசேனா சமேத முருகனின் பிரதிநிதிகளாக இருக்கும்
பட்டாச்சாரியார்களால் அருளாசி வழங்கப்பெறுவதோடு, விருந்து உபசாரமும் சிறப்பாக
அளிக்கப்பெற்று வருகிறது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு
திருமணம் கைகூடலும்,சந்தானப்பேறும் வாய்க்கப்பெறும் அன்பர்களின் அருள் அனுபவமே
சாட்சி!
குருபூஜையின் கடைசித்
திருநாளிலும், மகா கந்த சஷ்டி கடைசித் திருநாளிலும் முருகப் பெருமானின்
அனுக்கிரகம் கிடைக்கும் வண்ணமாக பாம்பன் சுவாமிகள் உபயோகித்த திருநீற்றுப்
பையிலிருந்து மஹா பிரசாதமாக விபூதியினை அளிக்கும் “ஆஸ்தான பூஜை” சிறப்பாக நடைபெற்று
வருகிறது.
அர்ச்சனை, தூப, தீப, ஆராதனை
மற்றும் வழிபாட்டுக்கு வரும் அன்பர்களிடம் எவ்விதமான கட்டணமும் பெறப்படுவதில்லை.
ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும் அன்பர்கள் மற்றும் உபயதாரர்கள் அனைவரும்
முழுமன விருப்பத்துடன் அளிக்கும் நிதியிலிருந்து நடைபெற்று வருகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை மற்றும்
வளர்பிறை சஷ்டி விரத தினங்களில் சந்தான வரம் விரும்பும் தம்பதியினருக்கு சந்தான
வரம் நிறைவேறும் வண்ணமாக தம்பதிகளால் பாலதண்டாயுதபாணி உற்சவ திருமேனியை சுமந்து
ஆலயத்தில் வலம் வருவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பெற்று வருகிறது.
ஒவ்வொரு பௌர்ணமி
தினத்தன்று இரவு குமாரஸ்தவம் ஓதி தீர்த்தபூஜை செய்து அன்பர்களின் பிணி போக்கும்
வண்ணமாக தீர்த்தம் அளிக்கப் பெற்று வருகிறது.புற்றுநோய்,தோல்வியாதிகள் மற்றும்
இருதயநோய் இவைகளிலிருந்து குணம்பெற்றதை அன்பர்களின் அனுபத்தால் அறிந்து கொள்க.
குருபூஜை மற்றும் மகா
கந்த சஷ்டி விழாவின்போது நமது மடாலயத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பயன்படுத்திய
திருநீற்றுப்பை மற்றும் பாதுகை ஆகியன அன்பர்களின் தரிசனத்திற்காக கண்ணாடிப்
பேழையில் வைக்கப்பெற்று பூஜை நடைபெறும்.
மடாலய ஸ்தல விருட்ஷமாக “ கொய்யாமரம் “
மடாலய ஸ்தல
விருட்ஷமாக “ கொய்யாமரம் “ விளங்குகிறது. இம்மரத்தில் எப்பொழுதும் காயும்,கனிகளும்
இருப்பதும் ஒவ்வொரு கிளைகளிலும் வித்தியாசமான சுவையுடைய கனிகள் இருப்பதும் காணக்
கிடைக்காத ஓர் அற்புதமாகும்.இம்மரத்தில் தொட்டில் கட்டினால்,சந்தான
பாக்கியமும்,சுவாமிகளது திருநாமம் தாங்கியமாலை சாற்றினால் தேர்வில்
வெற்றி,கோரிக்கைகள் வெற்றி, வேண்டுதலில் வெற்றி என அனைத்து நற்பலன்களையும்
இத்தலவிருட்ஷம் தன்னை நாடி வருவோரின் தேவைகளை இறையருளால் பூர்த்தி செய்து வருகிறது
ஸ்தலவிருட்ஷம் காணீர் ! நற்பலன் பெறுவீர் !
தியானகுடில்
இம்மடாலயம்
தோன்றுவதற்கு காரணமாயிருந்த சுவாமிகளின் முதன்மைச் சீடர் கவிகு. நயினா சுவாமிகளின்
சமாதி மேடை இம்மடாலயத்தின் அருகாமையில் உள்ளது. இவ்விடத்தில் தியானம் மேற்கொள்வது
நல்ல பலனைத் தரும் என்பது சுவாமிகள் வாக்கு. அன்பர்கள் அனைவரும் தியானக் குடிலை
தரிசனம் செய்து சீடரது அருளைப் பெறவேண்டுகிறோம்.
அன்பர் அனைவரும் வருக
! குருவருள் பெறுக !
என்றும் இறைபணியில்
ஆர்.ஸ்ரீதர்
தலைமை மருந்தாளுனர்,அண்ணாமலை பல்கலைக்கழகம்
செயலாளர்,ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
மடாலயம்,மயூரபுரம்,சிதம்பரம்.